Advertisement

Responsive Advertisement

அவளும் நானும் - 2

She And I - 2



இப்பொழுது பவிஷ்  கல்லூரியில் பயின்று வருகிறான். மலர்விழி அதே பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வருகிறாள். பவிஷ் தனது சித்தி வீட்டிற்கு சென்று அவளை பார்த்து எப்படியாவது காதலை வெளிப்படுத்தலாம் என எண்ணுகிறான். ஆனால் மலர்விழியின் குடும்பம் வேறு ஒரு வீட்டிற்கு குடிபெயர்ந்து சென்றதை தன் சித்தியின் மூலம் அறிகிறான். இதைக் கேட்டதும் அவன் மனம் நொறுங்கியது. தான் என்ன செய்வதென்று அறியாமல் குழப்பத்தில் ஆழ்ந்தான்.
      
                 வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்பது போல மலர்விழியைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் வாடினான் . இனி அவள் தன் வாழ்வில் இல்லை என்று எண்ணி சோகத்தில் மூழ்கினான். இதை தன் நண்பர்களிடம் கூறினான். அவனுடைய நண்பர்களுள் ஒருவனின் தம்பி-(யுவராஜ்) மலர்விழியின் வகுப்பைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

பவிஷ் யுவராஜை அழைத்து மலர்விழியின் வீடு இருக்குமிடம் தெரியுமா? என்று வினவினான். அதற்கு யுவராஜ் அவள் வசிக்கும் தெருவின் பெயர் மட்டுமே தெரியும். மேலும் அந்த தெருவில் 4, 5 வீதிகள் உள்ளது .அதில் எந்த வீதியில் அவள் வசிக்கிறாள் என்பது எனக்கு தெரியாது! என்று பதில் அளித்தான். அவளைப்பற்றி எதற்காக நீங்கள் வினவுகிறீர்கள் என்றான் யுவராஜ். தன் சித்தி கேட்கச் சொன்னதாகக் கூறி சமாளிக்கிறான் பவிஷ். இதுவே போதும் என்ற நம்பிக்கையில் தெருவின் பெயரை கேட்டறிந்து ஒவ்வொரு வீதியிலும் சுற்றித் திரிந்தான் பவிஷ். அவள் பன்னிரண்டாம் வகுப்பு பயில்வதால் அவளது வீட்டில் அவளை வெளியில் செல்ல அனுமதிப்பதில்லை. அதனால் அவளது வீட்டை கண்டு பிடிக்க முடியாமல் கவலையுடன் வீடு திரும்பினான்.

அடுத்த நாள் தன் கல்லூரியிலிருந்து வீடு திரும்புகையில் இன்று யுவராஜை அழைத்து மலர்விழியின் சரியான முகவரியை கேட்டு வருமாறு கூறலாம் என நினைத்துக் கொண்டு, தனக்குத்தானே பேசிக்கொண்டு நடந்து வருகிறான் பவிஷ். அவன் சாலையை கடப்பதற்காக நின்று கொண்டிருக்கும் பொழுது தன் தந்தையுடன் இரு சக்கர வாகனத்தில் பள்ளியை முடித்து வீடு திரும்பும் மலர்விழியை காண்கிறான். அவளைக் கண்டதும் அளவற்ற இன்பத்தை அடைகிறான். இது கனவா நினைவா என்று அவன் நினைத்துப் பார்ப்பதற்குள்ளேயே மலர்விழி இவனது பார்வையில் இருந்து தப்பி விட்டாள். 

அதேபோல மீண்டும் அடுத்த நாள் கல்லூரியில் இருந்து வந்து சாலையைக் கடப்பதற்கு நிற்கும் பொழுது மீண்டும் மலர்விழியை காண்கிறான். இந்தமுறை மலர்விழியும் பவிஷை கண்டுவிட்டாள். அவள் அந்த சாலையைக் கடப்பதற்கு முன் மூன்று முறை பவிஷை திரும்பி பார்த்த வண்ணம் சென்றாள். ஒரு நாள் கல்லூரி விடுமுறை அன்று மலர்விழிக்கு சிறப்பு வகுப்பு உள்ளதை யுவராஜின் மூலம்  அறிகிறான் பவிஷ்.  மலர்விழியை காண்பதற்காக சாலையின் ஓரம் காத்துக் கிடக்கிறான் பவிஷ். என்றும் போல தன் தந்தையுடன் அவள் வருகிறாள், அவளின் வீட்டை காண அவர்களை தன் சைக்கிளில் பின் தொடர்கிறான். இறுதியில் அவளது வீட்டையும் கண்டுவிட்டான். ஆனால் அவளின் வீட்டை கடந்து செல்லும் போதெல்லாம் அவளின் தாயாரை மட்டுமே காணமுடிந்தது.

     ஒருநாள் பள்ளியில் மலர்விழி யுவராஜ் உடன் உரையாடிக் கொண்டிருக்கும் பொழுது, அவனது அண்ணனை பற்றி விசாரிப்பது போல பவிஷை பற்றி விசாரிக்கிறாள். அப்பொழுது யுவராஜ், ஒரு நாள் பவிஷ் உன்னை பற்றி விசாரித்ததார் எனக் கூறுகிறான். அதைக் கேட்டதும் மலர்விழிக்கு ஆர்வமும் ஆனந்தமும் பெருகியது. என்னைப் பற்றி என்ன கேட்டார் என்றாள் மலர்விழி. உன் வீட்டின் முகவரியை அவரின் சித்தி கேட்டதாக என்னிடம் கேட்டார் என்றான் யுவராஜ். தன்னுடைய எதிர்பார்ப்பு ஏமாற்றம் அடைந்ததை நினைத்து வருந்தினாள் மலர்விழி.

பவிஷின் நண்பன் ஒரு பெண்ணை காதலித்து வருகிறான் அவளும் அவனை காதலித்து வருகிறாள். அவனுக்கு அந்தப் பெண்ணிடம் நேரில் பேசுவதற்கு பயம். எவ்வளவு பயம் என்றால் தன்னுடைய காதலையே வேறு ஒருவர் மூலமாக தெரிவித்துள்ளார், அவ்வளவு பயம். ஒரு நாள் நேரில் பேசி விடலாம் என துணிவுடன் பவிஷை  உடன் அழைத்து சென்றான். அந்தப் பெண்ணும் வந்துவிட்டாள், மூவரும் உரையாடிக் கொண்டிருக்கின்றனர் திடீரென்று தெரிந்தவர் யாரோ வருவதுபோல் தோன்றியதால் பவிஷின் நண்பன் சற்று நகர்ந்து நின்றான். அப்போது அவ்வழியே மலர்விழி அவர்களை பார்த்தபடியே கடந்து சென்றாள். அதை பவிஷ் காணாமல் போனான்.

 மலர்விழி பள்ளியில் ஆண்டு விழா நடைபெற உள்ளதை அறிந்தான் பவிஷ். இது தான் தனக்கு கிடைத்த இறுதி வாய்ப்பு இந்த வாய்ப்பை தவறவிடக்கூடாது, கண்டிப்பாக காதலை வெளிப்படுத்தியே தீரவேண்டும் என்று மனதை திடப்படுத்தி தன் நண்பர்களுடன் பள்ளிக்குச் சென்றான். அவளிடம் ரோஜாமலரை கொடுத்து காதலை வெளிப்படுத்தலாம் என எண்ணினான். பின் அவன் யுவராஜை அழைத்து இந்த ரோஜாவை மலர்விழி இடம் கொடுத்து விடு என்றான். யுவராஜ் ஒரு நிமிடம் காத்திருங்கள் வருகிறேன் என்று கூறி சென்றான். யுவராஜ் திரும்பி வருகையில் வேறு ஒருவனை அழைத்துக் கொண்டு வந்தான். இவனிடம் ரோஜாவை கொடுத்து அவளிடம் கொடுக்க சொல்லுங்கள் என்றான் யுவராஜ். அதற்குப் பவிஷ் நான் ஏன் இவனிடம் கொடுக்க வேண்டும் நான் உன்னிடமே தருகிறேன் என்றான். இவன் தான் மலர்விழியின் காதலன் என்றான் யுவராஜ். இதனைக் கேட்டதும் மகிழ்ச்சி கோபம் சோகம் குழப்பம் இதை அனைத்தையும் ஒரே நேரத்தில் அனுபவித்ததை போல முக பாவனையை  வெளிப்படுத்தினான் பவிஷ். கையிலோ ரோஜா பூ, தூரத்திலோ மலர்விழி, எதிரிலோ அவளின் காதலன்! என்ன செய்வது? என்று அறியாமல் திகைத்து நின்றான். நீங்கள் எவ்வளவு நாளாக காதலிக்கிறீர்கள் என்று மலர்விழியின் காதலனை பார்த்து கேட்டான் பவிஷ். நான் காதலை வெளிப்படுத்தி ஒரு வருடம் ஆகிவிட்டது! அவளோ சில நாட்களுக்கு முன்புதான் எனது காதலை ஏற்றுக்கொண்டாள் என்றான் மலர்விழியின் காதலன். மேலும் அவன் நீங்கள் ஏன் இதை வினவுகிறீர்கள் மற்றும் எதற்காக இந்த ரோஜா மலர் என்றான். இந்த ரோஜா மலரை அண்ணன் கொடுத்ததாக அவளிடம் கொடுத்துவிடு மேலும் தங்கையை பற்றி விசாரித்ததாக மலர்விழியிடம் கூறுவிடு என்று சொல்லி அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றான் பவிஷ்.



Post a Comment

2 Comments

  1. காதலில் ஏற்படுகின்ற தோல்வி, வாழ்வில் ஏற்படப்போகும் வெற்றியாகும்

    ReplyDelete
    Replies
    1. வெற்றியும் தோல்வியும் நாம் ஏற்றுக் கொள்வதில் தான் உள்ளது

      Delete