பஞ்சணைத்த மெத்தையிலே உடல ணைத்துப்
பழமணைத்த பாவையினை
அருகி ழுத்து
நெஞ்சணைத்துக் காதலிலே நினைவ ணைத்து
நினை வணைத்த உலகத்தின் உறவொழித்துக்
கொஞ்சவைத்துக் கொஞ்சிமதுச் சுவைகு டித்துக்
குறையாத இன்பத்தில் திளைக்கு நாளில்
பிஞ்சுமனப் பிள்ளைகளில் ஒன்றி ரண்டு
பிறந்து விட்டால், அப்பப்பா என்ன
என்ன தொல்லை!
அதுவரைக்கும் 'மனை ' யாவாள் அன்னை யாகி
அடுத்தபடி தான் என்னைக் கவனிக் கின்றாள்!
எதுவரைக்கும் இது போகும் ? குழந்தை தின்றே,
இருக்கின்ற மீதியையே தரும் வரைக்கும்!
அதுவரைக்கும்' 'பசி' என் பேன்; ''அம்மா' என்பேன்!
"அழுகிறது குழந்தை, சற்றுப் பொறுப்பீர்'' என்பாள்;
மதுவரைக்கும் இதழாளின் முத்தங் கூட
மக்களுக்கே முதலில் பின் எனக்குங் கொஞ்சம் !
நள்ளிரவில் பிள்ளையெலாம் தூங்கும் போது
"நடத்திடுவோம் சுகப்பாடம்'' என நினைந்து,
மெள்ள மனை மாதரசின் அருகில் சென்று
மெய்தீண்டி, "வா'', என்பேன்; அவளும் நெஞ்சம்
உள்ளவள்தான் ஆகையினாள் எழுவாள்; பிள்ளை
துள்ளி எழும் ஓலமிடும் தோல்வி ! தோல்வி !
கதை நடுவில் பிள்ளையழும் கதையும் ஒன்றே!
பொறுக்காமல் தாவி அவள் இதழ ணைப்பேன்!
சின்னேரம் பொறுத்திருப்பேன் ; அன்னை அந்தச்
சிறுகுழவிதனை ஆற்றித் தூங்க வைத்துப்
பொன்னடியை மெல்லெடுத்து வருவாள் ; காதல்
தன் நினைவை மறக்குங்கால் மீண்டும் பிள்ளை
தாவிவரும்! கூவி அழும்! "அம்மா! ' என்னும்;
எந்நிலையில் நானிருந்த போதும் என்னை
இடுப்பொடியத் தள்ளிவிட்டு மகனைப் பார்ப்பாள் !
முத்தமிடப் போவேன் நான் ; பிள்ளை வந்து
முட்டாதே ! கொன்னுடுவேன் !" என்னும் காதல்
முத்தத்தை முட்டுதலாய் நினைக்கும் பிள்ளை
முக்காடு போட்டு தன் தாயைக் காக்கும்!
சித்திரத்தாள் புன்னகைப்பாள்! அந்த முத்தம்
சிதறாமல் அவனுக்கே போகும் ! தீர்ந்த
பத்திர மாய் நானிருப்பேன் ! தென்றல் வந்து
பத்தினிபோல் என் னிதழைத் தொட்டுப் போகும் !
கண்ணல்ல! கனியல்ல!'' என்பாள் என்பால்
கற்றதெல்லாம் மகனுக்குக் கரந்து வைப்பாள்;
கண்ணல்ல மரமல்ல கணவன் ! கொஞ்சம்
மகனைத்தான் விட்டுவிட்டு வாயேன்!'' என் பேன்;
"பொன்னல்ல! பொருளல்ல ! எனக்குப் பிள்ளை
போதும் !" என் றென் னிடமே சொல்வாள்! இந்தக்
கண்ணெல்லாம் நான் கொஞ்சம் தனித் திருந்தால்
கருவாகி உருவாகி வருவ தேது?
காதலுக்கு வழிவைத்துக் கருவைச் சாத்தக்
கதவொன்று கண்டறியக் கவிஞன் சொன்னான்
காதலுக்கே கதவாகிப் பிள்ளை யெல்லாம்
கதவடைப்புச் செய்வதனால் தானோ சொன்னான் ?
வேதனைதான் ! மெய் தீண்டி மகிழு தற்கு
வேண்டுமொரு பிள்ளை யெனத் தவங்கி டந்தால்
சோதனைக்கு வந்தது போல் வந்த பிள்ளை
துண்டித்துப் போடுதடா காதல் வாழ்வை !
'மனைவி'யெனில் மனைவியென் றெ இருக்க வேண்டும்
மகன் வந்து 'அன்னை' யென மாறி விட்டால்
தினை விதைத்து வினையறுத்த கதைதான் ! அப்பா !
சிறு துளியும் அவள் நெஞ்சம் நமக்கென் றில்லை !
மனை விளக்க மகவொன்று வேண்டு மென்றால்
வயதறுப தாகுங்கால் வரட்டும் ! போதும்
இனிச்சகியோம் ! ஆடவர் காள் ! எழுந்து வாரீர் !
இன்று முதல் பிள்ளைகளை எதிர்ப்போம் நாமே !
- கவிஞர் கண்ணதாசன்
2 Comments
அருமை அருமை
ReplyDeleteCredits to Kannadhsan sir..
Delete