Advertisement

Responsive Advertisement

மனதின் வெற்றிடம் (vacuum of the mind)

 



இந்த பதிவில் இன்பம், துன்பம், அமைதி இம்மூன்றில் எது சிறந்தது?, எது மனதின் வெற்றிடம் என்பது பற்றி பார்ப்போம்.




இன்பம் :

இன்பம், அனைத்து மனிதர்களும் என்றும் தன்னிடம் நிலைத்திருக்க வேண்டும் என எண்ணிக்கொண்டிருக்கும் ஒரு சுகம் தான் இன்பம்.

இந்த இன்பமானது ஒரு கால ஓட்டி என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா! ஆம், இன்பம் ஒரு கால ஓட்டிதான் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் பொழுதோ அல்லது வேறு ஏதேனும் தருனத்தில் இன்பமாக இருக்கும் பொழுதும் நீங்கள் நேரத்தை கண்டு கொள்ளாமல் அதை வெகு விரைவில் கடந்து செல்கிறீர்கள்.

 இது உங்கள் வாழ்வில் நீங்கள் சந்தோஷத்துடன் இருந்த தருணங்களை சற்று நினைத்துப் பார்த்தாலே அவை எவ்வாறு கடந்து சென்றன என்று யோசிப்பீர்கள்.

நீங்கள் மிக்க மகிழ்ச்சியுடன் இருக்கும் பொழுது உங்கள் மூளை காலத்தை கண்டுகொள்ளாது.

இங்கு தினமும் இன்பத்தையே அனுபவிக்கின்ற மனிதன் எப்பொழுதும் காலத்தை கண்டுகொள்ளவே மாட்டான். இந்த இன்பம் அவனை காலத்தை கண்டு கொள்ளாத அளவிற்கு மனதை மயக்குகிறது.

 நீங்கள் சந்தோஷத்துடன் இருக்கும் அவ்வேளையில் தான் ஒரு நாள் என்பது ஒரு மணி நேரத்தை கடந்தது போல் உங்கள் மூளை உங்களை உணர வைக்கும்.

அப்படி பார்த்தோமேயானால் இன்பம் ஒரு கால ஓட்டியை போல் தான் செயல்படுகிறது.

 இங்கு வாழ்கின்ற ஒவ்வொரு உயிரினமும் தான் என்ன செய்தாலும், செய்ய வில்லை என்றாலும் காலமானது அதன் போக்கில் சென்று கொண்டுதான் இருக்கும்.

அதில் இன்பம் கால விரயத்தை நம் மூளையில் செயல்படுத்துகிறது.

இப்படிப் பார்த்தால் இன்பத்தினால் நாம் வாழும் வாழ்க்கையின் காலமானது வெகு விரைவில் கழிவதால் அப்போது இன்பம் இன்பமா? அல்லது துன்பமா?.

இன்பத்தினால் நாம் இங்கு எந்த பாடத்தையும் கற்றுக் கொள்வதில்லை.

 இன்பத்திற்காக மட்டும் தான் நாம் பாடத்தை கற்றுக் கொள்கிறோம் அப்பொழுது இன்பம் ஒரு மனதை மயக்கும் போதையாக செயல்படுகிறது.

இப்படி இருக்க இன்பமானது எப்படி இன்பமாகும்?.

இப்பொழுது துன்பத்தைப் பற்றி பார்ப்போம்.




துன்பம் : 

துன்பமானது உலகில் வாழும் எந்த உயிரும் விரும்பாத ஒரு உணர்வாகும்.

எந்த உயிரும் துன்பத்தை தேடிச் செல்லாது அப்படியிருக்க துன்பத்திலும் ஒரு சிறப்பு உள்ளது.

அது என்னவென்றால் நீங்கள் உங்களது வாழ்க்கையில் பட்ட துன்பத்தை நினைத்து பார்த்தீர்களானால்.

நீங்கள் அனுபவித்த சிறு சிறு துன்பம் கூட இப்பொழுதும் நினைவில் இருக்கும் ஏனெனில் நீங்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது காலமானது மிகவும் குறைவாக சென்றது போல் உங்களுக்கு தோன்றும்.

உங்களை பெருந்துயரம் ஆட்கொண்டிருந்த வேளையில், ஒரு நாளானது ஒரு வருட காலம் சென்றது போல் உங்கள் மூளை உணரவைக்கும்.

இவ்விடத்தில் துன்பமானது காலத்தை குறைவாக விரையமாக்கும் ஒரு உணர்வை மூளைக்கு தருகிறது. அதனாலேயே, துன்பமானது உங்கள் வாழ்க்கையின் தூரத்தை நீட்டிப்பதாக உங்களுக்கு தோன்றும்.

இங்கு நாம் துன்பத்தைக் கண்டு இன்பத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றோம்.

 ஓடிக்கொண்டிருப்பதை நிறுத்தினால் துன்பமானது பற்றிக் கொண்டுவிடுமோ என்ற பயத்திலே  இன்பத்தை தேடி ஓடிக் கொண்டிருக்கிறோம்.

துன்பமானது நமக்கெல்லாம் ஒரு குருவாக இருக்கிறது.

 துன்பம் இங்கு இல்லையென்றால்  வாழ்க்கையின் பாடத்தை யாரும் கற்றுக் கொள்ள விரும்புவதில்லை.

 இன்பம் எனும் போதை மயக்கத்தினாலே இங்கே எந்த ஒரு படைப்பும், உழைப்பும் இருந்திருக்காது.

நீங்களே சற்று யோசித்துப்பாருங்கள் உங்களது வாழ்க்கையில் இன்று நீங்கள் நல்ல நிலைமையில் இருக்கிறீர்கள் அல்லது நல்ல நிலைமைக்கு சென்று கொண்டிருக்கிறீர்கள் என்றால் அதற்கு துன்பம் மட்டுமே காரணமாக இருக்கும்.

அப்படி என்றால் துன்பம் உங்களுக்கு ஒரு நல்ல பாடத்தைக் கற்றுக் கொடுக்கிறது.

துன்பம் வாழ்க்கையின் இன்பத்தை மட்டும் தேடிச் செல்லாமல், அமைதியையும், வாழ்க்கையின் புரிதலையும் தேடிச்செல்லும் பாடத்தை கற்றுத் தருகிறது.

இப்படி இருக்கையில் துன்பம் எப்படி துன்பமாகும்?.

துன்பமே அனைத்து இன்பத்திற்கும் காரணமாக அமைகிறது.

இப்போது அமைதியைப்பற்றி காண்போம்.




அமைதி :

அமைதி என்பது துன்பம், இன்பம் இவ்விரண்டிற்கும் சாராத ஒரு நிலையே அமைதியாகும்.

மனிதன் துன்பத்தில் இருக்கும் பொழுது இன்பத்தை நோக்கி ஓடுவான், இன்பத்தில் இருக்கும் போது அதன் போதை மயக்கத்தால் தவறிழைத்து மீண்டும் துன்பத்தில் சிக்கி தவிப்பான்.

இவ்வாறு இன்பமும், துன்பமும் சுழற்சி முறையில் மாறி மாறி ஒவ்வொரு மனிதனுக்கும் கால முறையிலும், சூழ்நிலைகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தும்.

இவ்விரண்டும் இணைபிரியாத நண்பர்களாவர். அதனால், மனிதன் இதில் எவரோடு கைகோர்த்தாலும் இன்னொருவரின் கையையும் பிடித்தே ஆகவேண்டும்.

உதாரணமாக மனிதன் இன்பத்தை மட்டும் ஏற்றுக் கொண்டால் அவன் கட்டாயமாக துன்பத்தையும் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.

இவ்விரண்டின் பிடியிலிருந்தும் மனிதன் தப்ப வேண்டுமெனில் அதற்கு அமைதியே ஒரே வழி.

அமைதி என்பது இன்பம், துன்பம் இவ்விரண்டின் பொருள் அறிந்த ஒரு நிலைதான் அமைதி.

இன்பத்தில் இருக்கிறவன் என்றும் இன்பத்தில் மட்டுமே நிலையாகமாட்டான். அதேபோல், துன்பத்தில் இருப்பவன் என்றைக்கும் துன்பத்தை மட்டுமே காண்பதில்லை.

 இரு நிலைகளையும் மாறி மாறி அனைவரும் ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும்.

ஆனால், அமைதி என்பது இவ்விரண்டை போலவும் கிடையாது.

 அமைதியில் இருக்கும் ஒருவன் என்றும் அமைதியையே நாடுவான் அவனுக்கு எத்தனை துன்பமும், எவ்வகையான இன்பமும் அவனை நாடாது.

அமைதி என்பது இன்பம், துன்பம் இவ்விரண்டின் நிலையையும் ஏற்றுக்கொள்ளாத நிலையான ஒரு நிலையாகும்.

என்றும் அகத்தில் அமைதி உள்ள மனிதன் தெளிவான முடிவை எடுப்பான் தெளிவான சிந்தனையே கொள்வான்.

இன்பத்தில் இருக்கும் மனிதன் அதன் சுகத்தால் தவறிழைக்க முயற்சி செய்வான்.

துன்பத்தில் இருக்கும் மனிதன் தன்னால் இன்பத்தை அடைய முடியாது என எண்ணி தவறிழைக்கக் முயற்சி செய்வான்.

ஆனால், அமைதியை விரும்பும் நபர் எச்சுகத்திற்கும் இடம் அளிக்க மாட்டான், எத்தனை துன்பம் வந்தாலும் அவற்றை மனதிற்க்கு கொண்டு செல்லவும் மாட்டான்‌. இதனால், அவன் தவறு இழைக்கவும் மாட்டான்.

ஏனெனில், அமைதியை ஏற்றுக்கொண்ட ஒரு மனிதனின் மனம் ஒரு நிரந்தரமான நிலையை அடைகிறது.

 அந்த நிலை இன்பம், துன்பம் இவ்விரண்டின் நிலைகளிலிருந்தும் உயர்ந்த நிலையாகும்.

அமைதி அன்பை விரும்பும், அன்பு உண்மையை நேசிக்கும் அதனால் மனமானது தெளிவான ஒரு சிந்தனையை வெளிப்படுத்தும்.

இவ்வளவு ஏன் நீங்கள் உறங்கும் முன் உங்கள் மனம் அமைதி அடையா விட்டால் உங்களுக்கு உறக்கம் கூட வராது.

நீங்கள் இன்பத்தில் இருக்கும் பொழுது ஒன்றை மனதில் கொள்ளுங்கள் இந்த இன்பமானது காலந்தோறும் என்னுடன் வரப்போவதில்லை.

 அதேபோல், துன்பத்தில் இருக்கும் பொழுதும் துன்பமானது எனக்கு மட்டும் நேர்வதில்லை, இத்துன்பம் நிரந்தரமாக என்னுடன் இருக்கப்போவதுமில்லை காலம் அதற்குள் அனைத்தையும் மாற்றி விடும், என்று உங்களிடம் நீங்களே அடிக்கடி கூறிக் கொள்ள வேண்டும் அவ்வாறு நீங்கள் உங்கள் மனதில் இதை பதிய வைத்து விட்டால், உங்களுக்குத் துன்பம் வரும் பொழுதோ அல்லது இன்பத்தில் நீங்கள் தவறிழைக்க போகும் பொழுதோ உங்கள் மனம் இதை உங்களிடம் சொல்லும்,

 அப்பொழுது நீங்கள் தனியாக அமர்ந்து மனதில் இது எதுவும் நிரந்தரமில்லை இவற்றில் நான் எதை எடுத்துக் கொண்டாலும் அவை காலப்போக்கில் அழிந்துவிடும்.

 இங்கு அமைதியே நிரந்தரம் என எண்ணி சற்று அமைதியாக இந்த வாழ்க்கை அதன்போக்கில் ஏற்றுக்கொண்டு வாழ்க்கையை வாழத் தொடங்குங்கள்.

மனதின் வெற்றிடத்தை அமைதியால் மட்டுமே பெற முடியும்.

உங்கள் மனம் என்றும் எண்ணத்தை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறது. நம் மனதில் எண்ணத்தை கட்டுப்படுத்தி வெற்றிடம் ஆக்குவதே அமைதியின் நோக்கமாகும்.

அனைவருக்கும் எது கொடுக்கப்படுகிறதோ அது உங்களுக்கும் கொடுக்கப்படும், உங்களிடமிருந்து எது எடுத்துக்கொள்ளப்படுகிறதோ அது அனைவரிடத்திலும் எடுத்துக் கொள்ளப்படும்.

இங்கு எதுவும் நிரந்தரமில்லை அமைதியே நிரந்தரம்.

மனதின் வெற்றிடம் அமைதியே...


இந்த பதிவை முழுவதுமாக வாசித்த அனைத்து வாசகர்களுக்கும் நன்றி...


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Post a Comment

0 Comments