Advertisement

Responsive Advertisement

கற்றது தமிழ்

ஒரு மனிதன் தன் பிறப்பிலிருந்து இறப்பு வரை கற்றுக் கொண்டேதான் இருக்கிறான். முழுமையாக கற்றுக் கொண்டவர் என்று யாருமில்லை.
அவ்வாறு இருக்கையில் அவன் எவ்வாறு கற்றுக் கொள்கிறான் ? சிலர் புத்தகங்கள்,  பெரியோர்களின் அறிவுரை, தவறுகள், வெற்றிகள், தோல்விகள், நண்பர்களின் செயல்கள் போன்றவற்றிலிருந்து கற்றுக் கொள்கின்றனர். இவ்வாறு பல வகையான வகைகளில் கற்றுக் கொள்ளும் மனிதன் அதை பின்பற்றுகிறானா ?!. இந்தச் சமூகம் ஒரு மனிதனை எவ்வாறெல்லாம் மாற்றுகிறது என்பதைப் பற்றி இப்பதிவில் காண்போம்.


அன்றாடங்காய்ச்சியாய் ( நாட்கூலிபெற்றுவாழ்வோர் ) வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு ஏழை குடும்பத்தில் ஐந்தாவது மகனாய் பிறக்கிறான் கர்ணன் தன் குடும்பத்தார் தனக்கு எதுவும் வாங்கி தர இயலாத நிலையை சிறுவயதிலேயே புரிந்துக்கொண்டான். மேலும் அவனுடைய மூத்த உடன் பிறப்புகள் தங்களது பெற்றோரிடம் எதையுமே கேட்கமாட்டார்கள். அதைப் பார்த்து வளர்ந்ததால் இவனும்  அவ்வாறானான். அவனது குடும்பம் அரசால் அறிவிக்கப்படும் எந்த ஒரு இலவசத்தையும் தவறவிட மாட்டார்கள். இவனும் சிறுவயதிலிருந்தே எல்லா வரிசையிலும் நின்று தருவதை பெற்றுக் கொள்வான். ஒரு சில நேரங்களில் அந்த வரிசையில் யாராவது இவனிடம் பெயரை கேட்டால் இவன் தன் பெயர் கர்ணன் என கூறியதும் ஓரிரு நிமிடம் அவனை உற்று கவனிப்பர் அல்லது சிரிக்கத் தொடங்குவர். இவனுக்கு ஒரே ஆச்சரியம் ஏன் எல்லோரும் என் பெயரை கூறியவுடன் இவ்வாறு செய்கின்றனர். இவன் தன் பெற்றோரிடம் நடந்ததை கூறினான். மேலும் தனக்கு எதற்காக இந்த பெயரை சூட்டினர் என வினவினான் உன்னுடைய தாய் 9 மாத குழந்தையாய் உன்னை வயிற்றில் சுமந்து கொண்டிருக்கும் பொழுது எனக்கு வேலை எதுவும் இல்லாமல் போனது. அதனால் வீட்டில் ஒரு வேளை உணவுக்கே பஞ்சம் ஏற்பட்டது. அப்பொழுது திடீரென்று உன் அன்னைக்கு பிரசவ வலி வந்துவிட்டது. பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு நீயும் பிறந்தாய் பிரசவ வலியால் சோர்வுற்று நலிந்து கிடக்கும் உன் அன்னைக்கு உணவு கொடுக்கக் கூட வழியில்லாத நிலையில் ஒரு வேலை கிடைத்தது. அது ஊர் முழுக்கச் சென்று சுவரொட்டிகளை ஒட்டும் வேலை அவ்வேலையில் என்னுடன் பணிபுரிந்த  ஒருவன் இந்த சுவரொட்டியில் இருக்கும் படத்தின் பெயர் தான் கர்ணன், இந்த கர்ணன் உதவி என்று யார் வந்து கேட்டாலும் இல்லை என சொல்லாமல் அள்ளிக் கொடுப்பவனே  என்று அந்த படத்தைப் பற்றி புகழ்ந்து கூறிக் கொண்டிருந்தான். அதைக்கேட்டதும் அந்தக் கதாபாத்திரத்தின் குணத்தால்  கவரப்பட்டு உனக்கும் அப்பெயரை சூட்டினேன் என்றார். இதைக் கேட்ட பின், பெயர் ஒற்றுமையானால் குணம் ஒற்றுமையாக இருக்க  அவசியமில்லை. அவ்வாறே ஒற்றுமையாய் இருக்க வேண்டுமென்றால் மனிதர்கள்அனைவரும் ஒன்றே ஆவர்.  பிறகு ஏன் அவர்களுக்குள் பிரிவினை உள்ளது என தன் மனதில் எழுந்த கேள்விக்கு பதிலை சிந்தித்தக் தொடங்கினான். 

கர்ணன் தன் பள்ளிக்கு தினசரி பேருந்தில் பயணம் செய்வான் பேருந்தில் இவனுடன் பயணம் செய்யும் மாணவர்கள் அன்றைய தேர்வுக்கான பாடப்பகுதியை படித்துக் கொண்டே வருவர். ஆனால் இவனோ அவ்வாறு செய்யாமல் சுற்றியுளளவர்களை கவனித்தபடியே வருவான். ஒரு நாள் இவனது நண்பன் பேருந்தின் இருக்கையில் அமர்ந்து கொண்டிருந்த பொழுது
ஒரு முதியவர் தனக்கு இடம் அளிக்குமாறு கேட்டார். அதற்கு அவனது நண்பன் நான் படித்துக்கொண்டு இருக்கிறேன், இப்பொழுது என்னால் எழுந்து நிற்க முடியாது என்று கூறினான் . சிறிது நாள் கழித்து அதே முதியவர் மீண்டும் பேருந்தில் பயணிக்கிறார். இம்முறை அந்த முதியவர் தன் மனைவியுடன் வருகிறார் பேருந்தில் ஒரு இருக்கை மட்டுமே காலியாக உள்ளது. அந்த முதியவர் தன் மனைவியை அங்கு அமருமாறு வேண்டுகிறார். அவரது மனைவி அவரை அமருமாறு வேண்டுகிறார். அப்பொழுது அந்த இருக்கையில் மற்றொரு முனையில் அமர்ந்திருந்த ஒரு வாலிபன் எழுந்து நின்று இருவரும் அமர்ந்து கொள்ளுங்கள், நான் நின்று கொண்டு வருகிறேன் எனக் கூறுகிறான். இதைக் கேட்டவுடன் அந்த முதியவர் அந்த வாலிபரின் முதுகில் தட்டிக் கொடுத்து நன்றி தெரிவிக்கிறார். மேலும் அந்த வாலிபன் தான் இறங்கும் இடம் வரும்வரை நின்றுகொண்டே பயணிக்கிறார்.  கர்ணனுக்கு  அந்த வாலிபரைப் பற்றி தெரிந்து கொள்ள ஆசை வந்தது. அவர் ஒரு தொழிற்சாலையில் பணி புரிகிறார் என்றும் மேலும் தன் படிப்பை தொடர முடியாத நிலையினால் பணிக்கு செல்லும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார் என்றும் தெரியவந்தது.

ஒருநாள் அவனது பள்ளியில் கட்டுரைப் போட்டி நடைபெற உள்ளதாக சுற்றறிக்கை வந்தது. அதைக்கேட்டதும் நிறைய மாணவர்கள் போட்டியிட தன் பெயரை பதிவு செய்தனர். அப்பொழுது ஆசிரியர் அவனை அழைத்து தனது பெயரையும் பதிவு செய்யுமாறு வற்புறுத்தினார். அவர் கூறிய காரணத்தால் கர்ணனும் தனது பெயரை பதிவு செய்தான். அந்தப் போட்டியில் எந்தவிதமான தலைப்பு வருமென சிந்தித்துக்கொண்டு பேருந்தில் பயணம் செய்கின்றான். அப்பொழுது அவன் உடன் பயணிக்கும் மற்ற பயணிகள் தங்களது வாழ்க்கைக் கதை, அரசியல் கதை ,சினிமா செய்திகள் என பலவற்றை பலரிடம் பேசி கொண்டு வருகின்றனர். அதில் ஒருவர் இயற்கையைப் பற்றியும் அதன் வளங்கள் பற்றியும் மற்றவரிடம் பேசிக்கொண்டே வருகிறார்,  அதை உற்றுக் கவனித்தபடி இருந்தான் அங்கு உரையாடிக் கொண்டு இருந்தவர்களில் ஒருவர் அனைத்தும் ரசனையில் தான் உள்ளது என்றார். 

அடுத்த நாள் கட்டுரைப் போட்டி நடைபெறுகிறது தலைப்பு இயற்கை என கொடுக்கப்பட்டது. தலைப்பைக் கேட்டதும் மற்ற மாணவர்கள் அனைவரும் எழுத தொடங்கினார். கர்ணன் இயற்கை பற்றி என்ன எழுதுவது என சிந்தித்துக் கொண்டே இருந்தான். அப்பொழுது அனைத்தும் ரசனையில் தான் உள்ளது என பேருந்தில்  ஒருவர் கூறிய வார்த்தை இவன் நினைவிற்கு வந்தது. அதன்பின் இவன் எழுதத் தொடங்கினான், பிறகு போட்டி முடிந்தது.  சிறந்த மூன்று கட்டுரைகளுக்கு அடுத்த நாள் பரிசு வழங்குவதாக ஆசிரியர் கூறினார். அடுத்த நாள் ஆசிரியர் பரிசுகளை அறிவிக்கத் தொடங்கினார் முதலில் மூன்றாவது பரிசு கர்ணன் என அறிவித்தார் மீதமுள்ள இரண்டு மற்றும் முதல் பரிசுகளையும் சேர்த்து அறிவித்தார்.

ஆசிரியர் முதல் மூன்று பரிசு பெற்ற கட்டுரைகளை ஒரு மாணவனை அழைத்து படிக்கச் செய்தார். முதலிரண்டு பரிசு பெற்ற கட்டுரைகளும் பலவகை வண்ண பேனாக்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும் அதில் அடர்ந்த காடுகள், நீண்ட மலைகள், வியக்க வைக்கும் அருவிகள் போன்ற பிரம்மாண்டமான இயற்கை வளங்களைப் பற்றி நன்றாக சொல்லப்பட்டிருந்தது. 
 அடுத்ததாக கர்ணன் எழுதிய கட்டுரையைப் படிக்கத் தொடங்கினான். அதில் மதிய உணவு வேளையில் வயல் வேலையை முடித்த பிறகு நன்கு பசித்த ஒருவன் தனது தூக்குச் சட்டியில் உள்ள  சோற்றில் தயிரை ஊற்றி ருசித்து சாப்பிட்டு சிறிது நேரம் அங்குள்ள பஞ்சு போன்ற அருகம்புல்லின் மீது படுத்து உறங்குவது போல எழுதி இருந்தது.

இதனை படித்த பின்பு அவனது ஆசிரியர் மெய்யுருகி போனார். அனைவரும் இயற்கையை பிரம்மாண்டமானதாக அதை காண பல தூரம் பயணம் செய்ய வேண்டுமென காடுகளையும் மலைகளையும் காண வேண்டுமென எழுதியிருந்தனர்.

" தன் வீட்டின் தோட்டத்தில் உள்ள சிறு புல்லின் நுனியில் உள்ள பனித்துளியை அறியாமல் போய் விட்டேன் " என தாகூரின் கூற்றை போல கர்ணனின் கட்டுரை அமைந்துள்ளதை அவர் அறிந்தார்.
பிறகு அவர் கர்ணனை அழைத்து  பத்திரிக்கைகளுக்கு சிறுகதை மற்றும் கட்டுரை எழுதி அனுப்புமாறு அறிவுறுத்தினார். பின்னாளில் கர்ணன் ஒரு சிறந்த எழுத்தாளனாக 
வளர்ந்தான்.

பின்னாலில் கர்ணன் கவிதை எழுதவும் தொடங்கினான். அவன் கவிதைகள் இயற்றுவதற்கு அடித்தளமிட்ட கவிதைள் இவை,

மேகத்திலிருந்து அதிவேகத்துடன் வரும் நான்! மண்மேல் பட்டு சிதறாமல் ,உன்மேல் பட்டுச் சிதற வேண்டும்
                - காதலுடன் மழை.

ஏராளமான கொண்டாட்டம், எட்டிப் பார்க்கிறது வெட்கம், தன் அழகோ எக்கச்சக்கம் என்றெண்ணம், அவளை அலங்கரித்ததால். 
                 - வெக்கத்துடன் பூ

வாயில் ஊறிய எச்சியும் 
தண்ணீரை என்மேல் தழுவிய கையும்
எப்படி மாறியது ?
ஏளனமான எச்சிலாகவும் தொட மறுக்கும் கைகளாகவும் 
வயிறு ஆறிய பின் ! 
                     - வருத்தத்துடன் வாழை இலை


இந்த பதிவை முழுவதுமாக வாசித்த அனைத்து வாசகர்களுக்கும் நன்றி...


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏



Post a Comment

3 Comments