Advertisement

Responsive Advertisement

கவிஞர் கண்ணதாசனின் தத்துவ வரிகள்

Kannadhasan

'நான் ஒன்றுமே இல்லை' என்று எவன் நினைக்கிறானோ அவனுக்குத் தான்  'ஆண்டவனைத் தவிர ஒன்றுமே இல்லை' என்ற தெளிவு வரும்.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

உதவியின் மூலம் நண்பனையும், பதவியின் மூலம் எதிரியையும்,
ஆண்மையின் மூலம் மனைவியையும் திருப்தி செய்பவன் அவர்களை எப்படி வேண்டுமானாலும் ஆட்டி வைக்க முடியும்.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

நல்லவனுடைய இழப்பு நன்மையிலேயே முடியும், இழந்தது போலத் தெரிவதெல்லாம் ஏதோ வரப்போவதற்கு அறிகுறி.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

நல்லவனுக்குக் கையெழுத்துத் தேவையில்லை; தீயவனிடம் கையெழுத்து வாங்கினாலும்
பயனில்லை. தர்மம் மனத்திலிருந்தே வருகிறது. அது சூழ்நிலைகளால்
ஆசை காட்டப்பட்டாலும் மயங்குவதில்லை.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

ஆசை லயத்தில் கட்டுண்ட மனிதனை ஆட்டிப் படைப்பவை, மூன்று. அவை: பதவி, பொருள்,பெண்.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

தனக்குப் பிடிக்காத ஒன்றை பிரியத்தின் காரணமாக மற்றவர்கள் செய்தால், அதை மறுக்கக் கூடாது என்பது நாகரிக சம்பிரதாயமாயிற்றே!

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

மலர்கள் இறைவனுக்கும், மங்கையருக்கும் மட்டுமே உரியவை. மனிதன் சடலமாகும்போது தான்
மலர்கள் அவனை அலங்கரிக்கலாம். மணக்கோலமும் பிணக்கோலமுமே மனிதன் மாலைகள் தாங்கும்
கோலங்கள்.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

கவலையின் அளவு இருக்கும்வரை தான் கண்ணீருக்கும் வேலை. அது
மலையளவாகும் போது மனமும் மரத்துப் போகும்.முதலில் கொதிக்கும் போது தான் பால் பாத்திரத்தை விட்டு வெளியேறுகிறது. முற்றக் கொதித்தால் வற்றிப் போகிறது. நிற்கின்றவரை தான் தென்னை மரத்துக்குப் புயலைக் கண்டு பயம்; அதுவே விழுந்துவிட்ட பிறகு எந்தப் புயல் என்ன செய்ய முடியும்?

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

எதிர்த்துப் பேசினால் சுடச்சுட பதில்
கொடுத்துவிட முடியும், புகழ்ந்து பேச ஆரம்பிப்பவனை அப்புறப்படுத்துவது கடினமான காரியம்.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

கஷ்டமான காலங்களில் முட்டாள் தனமான யோசனைகள்
கெட்டிக்காரத்தனமாகத் தோன்றும். முயன்று பார்த்த பிறகுதான் அவை
முட்டாள்தனமானவை என்று புரியும்.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

இதயம் அவரவருக்கென்று தனித்தனியாகப் படைக்கப்பட்டு விட்டது. வேதனைகளைப் பரிமாறிக்
கொள்ள முடியுமே தவிர, இன்னொருவருக்காகத் தாங்கிக் கொள்ள முடியாது.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

மனிதர்கள் எப்படி வந்தார்கள் என்பதை அவர்களது மரணமே காட்டுகிறது. நாதியற்ற மரணம், நாடே திரளும் மரணம் என்று மரணத்திலும் இரண்டு வகை உண்டு.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

ரத்த பந்தமில்லாதவர்களையே கதறி அழவைக்கும் அற்புத மரணம் ஒருவருக்கு வாய்க்கிற தென்றால், அவர் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவர் என்று பொருள், சுடுகாடு வரையில் தொடர்ந்துவரும் கூட்டம் சடலத்தைச் சுட்ட பின்பும் பல ஆண்டுகள் வரை நினைவிலே வைத்திருக்கிறதென்றால், அந்தச் சடலம் ஆவியோடிருந்த போது செய்த தவம் அது. 

Post a Comment

2 Comments

  1. வாழ்க்கையின் எதார்த்தங்களை அள்ளித்தெழித்தவர் கவிஞர் கண்ணதாசன்.

    ReplyDelete
    Replies
    1. அருமையான கூறினீர்கள்

      Delete